குழந்தைப் பாடல் தொகுதிகள்

இசை, பாடல், செய்கைகள், நடனம் போன்றவற்றின்மூலம் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தருவது உலகெங்கும் நடைமுறையில் உள்ளது. இதன்மூலம் அவர்களது கற்றல் மேம்படுகிறது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள், அனுபவப்பூர்வமாகவும் பார்க்கிறோம்.

இதனால், மிகச் சிறிய குழந்தைகளுக்குக்கூட ‘நர்சரி ரைம்ஸ்’ எனப்படும் குழந்தைப் பாடல்கள் பள்ளிகளில், வீடுகளில், தொலைக்காட்சிகளில், குறுந்தகடுகளில் கற்றுத்தரப்படுகின்றன. வீட்டுக்கு யாராவது வந்தால் ‘மாமாவுக்கு ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் சொல்லிக்காட்டு, பார்ப்போம்’ என்று நாம் குழந்தைகளைத் தூண்ட, அவை நூற்று எழுபத்தாறாவதுமுறையும் அதே உற்சாகத்துடன் கண் சிமிட்டிப் பாடுகின்றன.

தமிழிலும் இதுபோல் ஒரு வளமான குழந்தைப் பாடல் கலாசாரம் இருந்தது. ஏனோ, அதனை மெதுவாக மறந்துவிட்டோம்.

நம் மரபில் ஏற்கெனவே இருந்த வாய்மொழிப் பாடல்கள், விடுகதைப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், புதிர் பாடல்கள் போன்றவற்றில் தொடங்கி, பின்னர் பாரதியாரில் ஆரம்பித்துக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பாரதிதாசன், அழ. வள்ளியப்பா, கவிஞர். செல்வ கணபதி என்று பலர் மிக அருமையான குழந்தைப் பாடல்களை எழுதிவந்திருக்கிறார்கள். அவற்றை இசையோடு பாடி வெளியிடுகிற பழக்கமும் இருந்தது.

இப்போதும், குழந்தைப் பாடல்கள் எழுதப்படுகின்றன. தமிழில் வெளிவரும் சிறுவர் இதழ்களில் எளிய கோட்டுச் சித்திரங்களுடன் அவ்வப்போது இந்தக் கீதங்கள் வெளியாகின்றன. அனிமேஷன் வீடியோக்களில் சிறுவர் பாடல்கள் வருகின்றன. இவை பரவலாகக் கேட்கப்படுவதும், குறிப்பாக, பாடப்படுவதும் குறைந்துவிட்டது.

ஆங்கில ‘ரைமிங்’ நுட்பத்துக்குத் தமிழின் எதுகை, மோனை, இயைபு நயங்கள் எவ்விதத்திலும் குறைந்தவை அல்ல. குழந்தைகளின் நாக்கு சுழல்வதற்கும், வார்த்தை வளம் பெருகுவதற்கும், மனத்தில் விஷயங்கள் பதிவதற்கும், அதற்கெல்லாம் மேலாக, அவர்கள் உற்சாகமாக உணர்வதற்கும் தமிழ்ப் பாடல்கள் பயன்படும், அர்த்தம் புரியாமல் மனப்பாடம் செய்கிற ஆங்கில கீதங்களைவிட.

சரி, நாங்கள் தமிழ்ப் பாடல்களைப் பாடத் தயாராக இருக்கிறோம். அவை எங்கே கிடைக்கின்றன?

அச்சுப் புத்தகங்கள் அதிகம் இல்லை. தமிழில் சிறுவர்களுக்காகவே வாழ்நாள்முழுக்க எழுதிக் குவித்த அழ. வள்ளியப்பா போன்ற பெரும் படைப்பாளிகளின் குழந்தைப் பாடல் நூல்கள்கூட, பரவலாக அச்சில் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில நல்ல நூல்களே கண்ணில் படுகின்றன.

சில மிக நல்ல சிறுவர் பாடல் நூல்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. ஆனால் எங்கோ ஏழு கடல், ஏழு மலை தாண்டி அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கின்றன. அதுதான் பிரச்னை.

அப்படியே கிடைத்தாலும், அவை ஒழுங்குடன் இல்லை. எழுத்துப் பிழைகள், கருத்துப் பிழைகள் ஒருபுறமிருக்க, முன்பு எப்போதோ எழுதப்பட்ட இந்தப் பாடல்களில் உள்ள சில வார்த்தைகள் இன்றைய குழந்தைகளுக்கு, ஏன் அவர்களின் பெற்றோருக்கே புரியாது. உரிய பொருள் தந்து அவற்றைப் புரியவைக்கவேண்டும்.

இன்னொரு விஷயம், குழந்தைப் பாடல் நூல்களில் நல்ல படங்கள் இருக்கவேண்டும், பெரிய எழுத்துகளில், சொற்களைச் சரியாக (பாடும் முறைப்படி) அடுக்கித் தரவேண்டும், பார்த்தவுடன் படிக்கத் தூண்டவேண்டும். இவையெல்லாம் இணையத்தில் இல்லை.

தமிழில் வந்துள்ள நல்ல குழந்தைப் பாடல்களைப் புதிய தலைமுறையின் பிள்ளைகளுக்கு எடுத்துச் செல்லும்வகையில் ‘முன்னேர் பதிப்பகம்’ ஒரு முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதன்கீழ் நான்கு சிறுவர் பாடல் நூல்களை இணையத்தில் இலவசமாகவே வெளியிடவுள்ளோம். அவை ஒவ்வொன்றும்:

 • தரமான, தேர்ந்தெடுக்கப்பட்ட, பாடுவதற்கு எளிய, அக்கறை கொண்ட பாடல்கள் (கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பாரதிதாசன், அழ. வள்ளியப்பா, கி. வா. ஜகந்நாதன் ஆகியோர் எழுதியவை / தொகுத்தவை, ஒவ்வொரு நூலிலும் சுமார் 20 பாடல்கள்)
 • சொற்கள் பாடும் முறைப்படி பிரித்து வழங்கப்பட்டிருக்கும், பாடல்களில் வரும் அரிய சொற்களுக்கு ஆங்காங்கே பொருள் தரப்பட்டிருக்கும்
 • குழந்தைகள் விரும்பும் வண்ணமயமான லேஅவுட்டில் படங்களுடன் இருக்கும் (PDF வடிவம்மட்டும்)
 • இந்நூல்கள் இணையத்தில் முற்றிலும் இலவசமாகவே தரப்படும், அவை கணினி, செல்ஃபோன், டேப்ளட், ஈபுக் ரீடர் போன்றவற்றில் வாசிக்கக்கூடிய PDF / EPUB / MOBI போன்ற வகைகளில் கிடைக்கும்
 • யார் வேண்டுமானாலும் இவற்றை டவுன்லோட் செய்து படிக்கலாம், இசையமைத்துப் பாடலாம், ஆடலாம், அவற்றை யூட்யூபில் ஏற்றலாம், குழந்தைகளுக்கு அச்சிட்டுத் தரலாம், ஈமெயிலில் அனுப்பலாம், தங்கள் தளத்தில் ஏற்றலாம், அச்சிட்டு விநியோகிக்கலாம், இரண்டே நிபந்தனைகள்: இவற்றை மாற்றக்கூடாது, விலைக்கு விற்கக்கூடாது

இந்த இலவச மின் புத்தகங்களை நூல்களைத் தயாரிப்பதற்கான தயாரிப்புச் செலவுகள் இங்கே குத்துமதிப்பாக:

 • பாடல் தேர்வு, Editing, அருஞ்சொற்பொருள்: ரூ 0 (முன்னேர் பதிப்பகம் இப்பணியை ஏற்கிறது)
 • அட்டைப்பட வடிவமைப்பு: ரூ 2000 (ஓர் அடிப்படை அட்டைப்படம் + அதன் 3 மாறிய வடிவங்கள்)
 • கவிஞர்களின் ஓவியங்கள்: ரூ 2000 (ஓர் ஓவியத்துக்குத் தலா ரூ 500. காப்புரிமைச் சட்டங்களின்படி, ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள புகைப்படங்களை நாம் அனுமதியின்றிப் பயன்படுத்த இயலாது)
 • உள் ஓவியங்கள்: ரூ 0 (Creative Commons, Commercial License உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்)
 • ராயல்டி: ரூ 0 (இந்நூல்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்பட்டவை)
 • உள் பக்கங்கள் Layout: ரூ 3000 (மொத்தம் சுமார் 250 பக்கங்கள், ஒருபக்கத்துக்குச் சுமார் ரூ 12)
 • இணையத்தில் சேமித்தல்: ரூ 0 (Scribd, Dropbox போன்ற இலவசச் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்)
 • விநியோக / மார்க்கெட்டிங் / விளம்பரச் செலவுகள்: ரூ 0 (அவசியப்படாது என நம்புகிறோம்)
 • அச்சுச் செலவு: ரூ 0 (தற்போது இதற்குத் திட்டமிடப்படவில்லை, பின்னர் போதுமான ஆதரவு இருந்தால் இந்நூலை இந்த வடிவத்திலேயே அச்சிட்டு விற்பனைக்குக் கொண்டுவரும் உரிமைமட்டும் முன்னேர் பதிப்பகத்திடம் இருக்கும், பிறந்த நாள், பள்ளி விழாக்கள் போன்றவற்றுக்கு இதனை யாரும் அச்சிட்டு இலவசமாக விநியோகிக்கலாம், அனுமதி பெறவேண்டியதில்லை)

ஆக, சுமார் ரூ 7000 செலவில் இந்த நான்கு நூல்களை நாம் விரும்பும் வகையில் கொண்டுவரலாம். அதன்பிறகு எந்தக் கூடுதல் செலவும் இன்றி இவை ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெற்றோருக்குப் பயன்படும். இன்றுமட்டுமல்ல, என்றென்றும் இணையத்தில் இருக்கும்.

நாங்கள் இந்தச் செலவை விளம்பரங்களின்மூலம் ஈடுகட்ட முனைகிறோம். ஒவ்வொரு நூலிலும் நான்கு என மொத்தம் 16 விளம்பரங்களைப் பெறவுள்ளோம்:

 • இவை ஒவ்வொன்றும் அரைப் பக்க விளம்பரங்கள், வண்ணத்தில்
 • உங்கள் விளம்பரம் உலகெங்கும் உள்ள தமிழ்ப் பெற்றோரைச் சென்று சேரவிருக்கிறது, அதைவிட முக்கியமாக, தமிழ்ச் சிறுவர் பாடல்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் நோக்கத்தில் உதவுகிறது
 • மேற்சொன்ன நான்கு நூல்களில் நீங்கள் விரும்பும் ஏதேனும் ஒன்றில் இவ்விளம்பரத்தை வெளியிடலாம். அதற்கான கட்டணம் ரூ 500
 • ஒரே நூலில் ஒன்றுக்கு மேற்பட்ட விளம்பரங்களை வெளியிட விரும்பினால், அதனைச் சேர்த்துப் பயன்படுத்திக்கொள்ளலாம் (அதாவது, ரூ 1000 செலுத்தி ஒரு முழுப் பக்க விளம்பரத்தை வெளியிடலாம்)
 • இந்நூல்கள் (முன்னேர் பதிப்பகத்தாலோ, பிறராலோ) அச்சிடப்படும்போது, உங்கள் விளம்பரமும் சேர்த்து அச்சாகும், அதற்குக் கூடுதல் கட்டணம் கிடையாது
 • குழந்தைகளுக்குப் பொருந்தாத சில விளம்பரங்களைத்தவிர மற்ற அனைத்தும் ஏற்கப்படும், பொருந்தாது எனத் தோன்றும் விளம்பரங்களை நிராகரிக்க முன்னேர் பதிப்பகத்துக்கு உரிமை உண்டு
 • நீங்கள் தொழில் நிறுவனம் அல்லாத தனி நபராக இருந்து இந்தத் திட்டத்துக்கு உதவ முனைந்தால், உங்கள் வலைப் பக்கத்துக்கு விளம்பரம் செய்யலாம், அல்லது வாழ்த்துச் சொல்லலாம்
 • ஒருவேளை 16 விளம்பரங்களுக்குமேல் கிடைத்தால், அவற்றைக் கொண்டு இன்னும் ஓரிரு நூல்களைக் கொண்டுவர முனைவோம்
 • ஒருவேளை 16 விளம்பரங்களுக்குக் குறைவாக, 8 விளம்பரங்கள் அல்லது அதற்குமேல் கிடைத்தால், இரண்டு அல்லது மூன்று நூல்களைக் கொண்டுவருவோம்
 • வரும் 2014 மார்ச் 31ம் தேதி வரை, 8 விளம்பரங்களுக்கும் குறைவாகவே கிடைத்தால், இத்திட்டத்தைக் கைவிடுவதே சரியாக இருக்கும். அப்போது விளம்பரங்களுக்காகப் பெற்றுக்கொண்ட பணம் முழுவதும் உரிய நபர்களுக்குத் திரும்பத் தரப்படும். ஏற்கெனவே நண்பர்களுடைய ஆதரவில் ஐந்து விளம்பரங்கள் பதிவாகிவிட்டதால், இந்நிலை ஏற்படாது என நம்புகிறோம்!

இந்த முயற்சியில் உங்கள் ஆதரவைக் கோருகிறோம். இந்நூல்களில் விளம்பரம் செய்யும் ஆர்வமுள்ளோர் munnerpub@gmail.comக்கு எழுதலாம், அல்லது (0)9900160925 என்ற எண்ணை அழைக்கலாம்.

நீங்கள் ‘விளம்பர’ப் பிரியராக இல்லாவிடினும், இதனை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி உதவுங்கள். வரும் சித்திரை மாதத்தில் இந்நூல்களை நிறைவு செய்து வலையேற்ற முனைவோம்!

Advertisements
Standard